நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பிலுள்ள மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மொத்தமாக ரூ.3 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த நிறுவனங்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ரூ.1 இலட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் இறக்குமதியாளரின் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட கட்டாய தகவல்களை குறிப்பிடாதமை ஆகியவை தொடர்பில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்கள் தொடர்பான வழக்குகளிலேயே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் தங்களது கொள்வனவு தொடர்பில் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், நியாயமற்ற அல்லது தன்னிச்சையான விலை நிர்ணயத்தைத் தடுப்பதற்கும் பொருட்களின் விலைகள் தெளிவாக காட்சிப்படுத்தப்படுவது அவசியம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களால் உணவு நச்சுத்தன்மை அல்லது ஒவ்வாமை போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால், விநியோகச் சங்கிலியை கண்டறிந்து பொறுப்பை உறுதி செய்வதற்கு இறக்குமதியாளரின் விபரங்கள் முக்கியமானவை எனவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்து பொருட்களிலும் விலைகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் உள்ளிட்ட உரிய தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் வணிக நிறுவனங்களுக்கு அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.
நுகர்வோர் ஏதேனும் முறைகேடுகளை அவதானித்தால், 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







