நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 33 சதவீதமாக காணப்படுவதாக, திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எச்.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 20 சதவீதத்தை நெருங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள நீரின் அளவு போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெறும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை நாளை (15) ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களில் பெரும்போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பது தொடர்பில், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி தொடர்பான முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








