ஆசிய மகளிர் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று (6) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் சோபனா மொஸ்டாரி 34 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் சமூதி பிரபோதா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை அணி சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி ஆசிய மகளிர் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.









