ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசிய தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.
ஒரு மாத காலம் நடைபெறும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகள் தொடர்பில் 37 ஊடாடும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தொடரில் பரிசீலிக்கப்படவுள்ள முக்கிய விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் சமர்ப்பித்துள்ள எழுத்துமூல புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் அடங்குகிறது.
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், ஊழலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அரசியல் கொலைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய கைதுகள் மற்றும் விசாரணைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, டிட்வா புயல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் உள்ளிட்ட சவால்களை இலங்கை எதிர்கொண்ட காலப்பகுதியாகவும் இந்த காலம் அமைந்துள்ளது.
எனினும், சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அடக்குமுறைமிக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் காரணமாக தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படும் நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அரச கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும், காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் தண்டனை விலக்கு ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்குகள் மற்றும் போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியுடன் தொடர்புடைய சில குற்றங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர மேலும் பல நடவடிக்கைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
Forw









