இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு–20 தொடரில் இருந்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் பிநுர பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின்போது ஏற்பட்ட காயங்களில் இருந்து இருவரும் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (4) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
LPL தொடரின்போது குசல் மெண்டிஸ் வலது காலிலும், பிநுர பெர்னாண்டோ முதுகுப் பகுதியிலும் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும், பிநுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவும் இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை இருபதுக்கு–20 குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில் இலங்கை இருபதுக்கு–20 அணியை சரித் அசலங்க வழிநடத்தவுள்ளார்.
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு–20 தொடர் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.








