இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக, கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் அதிரடி சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.
செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL தொடரின் 25ஆவது போட்டி பாசெட்டெர் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை குவித்தது.
அணியின் துடுப்பாட்டத்தில் அபாரமாக விளையாடிய தசுன் ஷானக, 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன.
குறிப்பாக, வெறும் 39 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த ஷானக, 281.39 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டுடன் தனது இன்னிங்ஸை நிறைவு செய்தார்.
இதன்மூலம், இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு செய்த அதிவேக சதம் என்ற சாதனையை தசுன் ஷானக படைத்துள்ளார்.
அத்துடன், CPL வரலாற்றிலும் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சீஃபர்ட் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் அடித்திருந்தனர்.
ஷானகவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 13.5 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 137 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் டிம் சீஃபர்ட் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஜெரேமியா லூயிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க மற்றும் அஷ்மீட் நெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.









