நோர்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தனது 89ஆவது வயதில் காலமானார்.
ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று காலை 6.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவின் வயதான அரச தலைவராக இருந்த மன்னர் ஐந்தாம் ஹெரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வேயின் மன்னராகப் பதவி வகித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனி நோர்வே மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, சிறுவயதிலேயே தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் நாட்டை விட்டு வெளியேறிய அவர், முதலில் சுவீடனுக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் சென்றார்.
1945ஆம் ஆண்டு நோர்வேக்குத் திரும்பிய ஹெரால்ட், நோர்வே அரச பாடசாலைகள் மற்றும் இராணுவக் கல்லூரியில் கல்வி கற்றதுடன், பின்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
தனது பள்ளிப் பருவ காதலியான சோஞ்சா ஹெரால்ட்சனை திருமணம் செய்வதற்காக, ஐரோப்பிய அரச குடும்பங்களைச் சேர்ந்த இளவரசிகளை திருமணம் செய்யுமாறு வந்த பல முன்மொழிவுகளை அவர் பல ஆண்டுகளாக நிராகரித்தார். இறுதியில் தனது தந்தையின் அனுமதியைப் பெற்று, 1968ஆம் ஆண்டு சோஞ்சாவைத் திருமணம் செய்துகொண்டார்.
1991 ஜனவரி 21ஆம் திகதி தனது தந்தையான மன்னர் ஐந்தாம் ஓலாஃப் மறைந்ததைத் தொடர்ந்து அரியணை ஏறிய ஹெரால்ட், நோர்வே முடியாட்சியை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
2011ஆம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உணர்வுபூர்வமான உரையும், 2016ஆம் ஆண்டு LGBTQ+ உரிமைகள், அகதிகள் மற்றும் மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாக அவர் நிகழ்த்திய உரையும் சர்வதேச அளவில் கவனம் பெற்றன.
மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஹெரால்டின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான பட்டத்து இளவரசர் ஹாகன் (Haakon) நோர்வேயின் அடுத்த மன்னராக அரியணை ஏறவுள்ளார்.









