அப்ரா அன்சார்
கொழும்பு;இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அந்நாட்டு ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்த இரகசியப் பயணம் தொடர்பான தகவல் வெளியான ஒரு நாளுக்குப் பின்னர், திங்கட்கிழமை இரவு ஐக்கிய அரபு அமீரகம் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது.
இஸ்ரேல் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னதாக இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன்னர், ஹமாஸ் அமைப்பின் பாரிய நடவடிக்கை ஒன்று இடம்பெறக்கூடும் என நெதன்யாகுவை ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி எச்சரித்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
“ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்” என அந்நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பான தகவலை இஸ்ரேலிய ஊடகங்களும் முன்னதாக வெளியிட்டிருந்தன.
ஒக்டோபர் 7 தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை!
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது 1,195 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் காஸா மீது போரை முன்னெடுத்தது. அந்தப் போரில் குறைந்தது 73,669 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னர், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக இஸ்ரேலிய நாளிதழான Haaretz செப்டம்பர் 9ஆம் திகதி செய்தி வெளியிட்டது.
அப்போது, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் தெரிவித்திருந்த “மிகப்பெரிய ஆச்சரியம்” தொடர்பான அச்சுறுத்தலை நெதன்யாகுவிடம் பின் சயீத் எச்சரித்ததாக Haaretz தெரிவித்தது.
இதற்கு முன்னரும் இஸ்ரேலின் Shin Bet புலனாய்வு அமைப்புக்கு பின் சயீத் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தாக்குதல்களுக்கு முன்னதாக பிரதமர் நெதன்யாகுவுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
Haaretz வெளியிட்ட செய்தி “புனையப்பட்டது” என்றும் “அரசியல் நோக்கம் கொண்டது” என்றும் கூறிய நெதன்யாகு, அதற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக மறுநாள் தெரிவித்தார்.
இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரக உறவுகள்
2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான Abraham Accords உடன்படிக்கையின் மூலம் இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்கிய அரபு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும்.
இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் நெருக்கமடைந்துள்ளன.
ஈரானின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் Iron Dome வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பணியாளர்களையும் அங்கு நிலைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபீ மே மாதம் தெரிவித்திருந்தார்.
நெதன்யாகுவின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் தொடர்பான செய்தியை இஸ்ரேலின் Channel 12 முதலில் வெளியிட்டது.
இந்தச் செய்தி பிரதமரின் பாதுகாப்புக்கும், புலனாய்வு அமைப்பின் செயல்பாட்டு முறைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, இஸ்ரேலின் இராணுவ தணிக்கையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக Shin Bet திங்கட்கிழமை தெரிவித்தது.
ஒக்டோபர் 7 தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை நெதன்யாகு புறக்கணித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, எதிர்வரும் Knesset நாடாளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் நிலையை உறுதிப்படுத்த அவர் முயற்சித்து வரும் நிலையில் வெளியாகியுள்ளது.
மூலம்: Al Jazeera







