இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து துறைகளுக்கும், துணை மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட தேவையான பணியாளர்களை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய சி.டி. ஸ்கேன் இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்விலும், புனரமைக்கப்பட்ட கண் சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தேவையான தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜைக்கா உள்ளிட்ட திட்டங்களின் நிதியுதவியுடன் சுமார் 195 கோடி ரூபா செலவில் மேலும் 11 சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேவைப்படும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அடுத்த ஆண்டுக்குள் சி.டி. ஸ்கேன் இயந்திரங்களை வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், வைத்தியசாலைகளுக்குத் தேவையான பரிசோதனை உபகரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையின் கண் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை நவீனமயமாக்கி, அதற்குத் தேவையான நவீன உபகரணங்களை வழங்கிய அருட்தந்தை டெரல் கூஞ்ஞவுக்கு அமைச்சர் தனது விசேட நன்றியையும் தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 105,000 உள்நோயாளர்களும், 280,000 வெளிநோயாளர்களும், 350,000 கிளினிக் நோயாளர்களும் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளைப் பெறுகின்றனர்.
சி.டி. ஸ்கேன் வசதி இல்லாத காரணத்தால் மாதாந்தம் சுமார் 90 நோயாளர்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 790 நோயாளர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்தியர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார்.
சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான புதிய சி.டி. ஸ்கேன் இயந்திரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைப் பிரிவு சுமார் 3 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, நீர்கொழும்பு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, மேயர் சாமர பிரனாந்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










