தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஜனநாயக ரீதியில் ஒன்று கூடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தடியடி மற்றும் வன்முறை நடவடிக்கைகளை மனிதநேய மக்கள் ஜனநாயகக் கட்சி (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் மாணவர்கள் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் அமைதியான முறையில் வெளிப்படுத்துவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
ஆனால், அதற்கு மாறாக பலத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் குரலை அடக்க முயற்சிப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான செயலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர் எழுச்சியை அடக்கவும், ஒடுக்கவும் முயன்ற அரசுகள் அனைத்தும் இறுதியில் மக்கள் தீர்ப்பின் முன் தோல்வியடைந்துள்ளன என்பதே வரலாற்றின் பாடமாகும்.
எனவே, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து, அமைதியான போராட்டங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்படுவதுடன், தேவையற்ற வன்முறையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பையும் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








