சவூதி அரேபியாவின் ரியாத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து மற்றும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
புதிய அலுவலகத்தை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் திமுத்து தென்னகோன் மற்றும் Almosafer Travel நிறுவனத்தின் உப தலைவர் சயீத் அல் ஃபரைஹ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சவூதி அரேபியாவுக்கான நாட்டுப் பணிப்பாளர் துசித விக்கிரமசிங்கவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
சவூதி அரேபியாவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொது விற்பனை முகவராக (GSA) Almosafer Travel நிறுவனம் செயற்படுகிறது.
புதிய அலுவலகம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகள், சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபிய சந்தையில் இலங்கையை சுற்றுலாத் தலமாக மேலும் பிரபலப்படுத்துவதற்கு Almosafer நிறுவனத்துடனான கூட்டாண்மை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள், வர்த்தகப் பங்காளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த வசதிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து தொடர்புகளை வலுப்படுத்துவதுடன், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








