க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
க்ரிஷ் நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்கம் (Transworks Square) காணியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகக் கூறப்படும் விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 70 மில்லியன் ரூபாய் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.








