கொழும்பு 07, பான்ஸ் வீதியில் அமைந்துள்ள சொத்து ஒன்றைத் தொடர்புபடுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து, ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 73 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர் நேற்று (15) களுத்துறை நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








