அப்ரா அன்சார்
காஸா குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய பட்டம் பறக்கவிடும் தினத்தில், இலங்கையின் Free Palestine Movement அமைப்பும் இணைந்து கொண்டது.
இதற்கமைய, கடந்த சனிக்கிழமை 12ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) குறித்த நிகழ்வு நடைபெற்றது.
காஸாவில் குழந்தைகள் பட்டம் பறக்கவிடுவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் பின்னணியில், காஸா குழந்தைகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் உலகின் பல பகுதிகளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நான்கு பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து இயக்கமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சேகரிக்கப்பட்ட கையெழுத்துகள் டியுனிசியா தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், காஸா தொடர்பான வடிவமைப்புகளுடன் மருதாணி கலை நிகழ்வும் இடம்பெற்றது. மருதாணி கலைஞர் ஒருவர் செயற்பாட்டாளர்களின் கைகளில் காஸா தொடர்பான பல்வேறு வடிவமைப்புகளை வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








