களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிகளில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைக்கு அமைவாக, நீர் விநியோகத்தை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நீரின் தரம் தொடர்பில் ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நீர் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு அமைவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீர் விநியோகத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சபை இன்று (25) காலை 6 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதன்படி, நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சார்ந்த பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்குள் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பத்தரமுல்ல, கோட்டே, பாமன்கடை மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதற்கு சிறிது காலதாமதம் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.









