கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுக்கு தலைவர்கள் உற்சாகமான வரவேற்பை வழங்கியுள்ளனர்.
அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய போருக்குப் பின்னர், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால், ஊடகங்களின் கவனத்திற்கு அப்பால் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கு இந்த மாநாடு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களுக்கிடையிலான பல கலந்துரையாடல்கள் மூடிய அறைகளுக்குள் இடம்பெற்றுள்ளன.
மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட உரையாடல்களின் அடிப்படையில், அமெரிக்கா திணிக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு எதிரான ஒருமித்த குரலை வெளிப்படுத்தும் தளமாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.
பிராந்திய இணைப்பு, செயற்கை நுண்ணறிவு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நீர் வளம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உலக தெற்கில் உள்ள நாடுகள் தங்களது பிரச்சினைகளுக்கு தாமாகவே தீர்வு காணும் திறன், விருப்பம் மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கிறது.
அத்துடன், கட்டாயப்படுத்தல் மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு பதிலாக, பல்தரப்பு ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திரத்தையே உலக தெற்கு நாடுகள் தொடர்ந்து ஆதரிக்கின்றன என்ற செய்தியையும் இந்த மாநாடு வெளிப்படுத்துகிறது.









