இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலுடனான பிரச்சினைக்கு “இராஜதந்திரத் தீர்வை” எட்டுவதற்கான முயற்சிகளில் சிரியா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அசாத் அல்-ஷைபானி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சிரிய எல்லைக்குள் தொடர்ந்து ஆழமாக அத்துமீறி நுழைந்து வருவதுடன், தெற்கு சிரியாவில் தமது படைகளை “பாதுகாப்பு வலயத்தில்” தொடர்ந்து நிலைநிறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் விரிவான இராணுவமயமற்ற வலயத்தை உருவாக்கவும் இஸ்ரேல் கோரி வருகிறது.
“தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் மட்டும் 65 அத்துமீறிய நுழைவுகளையும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் 52 அத்துமீறிய நுழைவுகளையும் நாம் அவதானித்துள்ளோம்” என அல்-ஷைபானி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குனைத்ரா மாகாணம் மற்றும் டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளில் வீடுகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புத் தாக்குதல்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த ஆண்டு இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தினரால் சிரியர்கள் கடத்தப்பட்டதாக 147 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 49 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த சவால்களுக்கு மத்தியிலும், இராஜதந்திரத் தீர்வைத் தேர்ந்தெடுப்பதில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். இதனை அடைவதற்கு நாம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்” என அல்-ஷைபானி கூறினார்.
“அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.










