இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட தளங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் போட்டிகளின்போது சூதாட்டத்துடன் தொடர்புடைய மறைமுக விளம்பர நிறுவனங்களின் அடையாளங்கள் தொடர்ந்து காட்சியளிப்பது குறித்து மூத்த ஆய்வாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டோட்டுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முக்கிய காணொளிகளை ஆய்வு செய்த அவர், இலங்கை கிரிக்கெட்டினால் வெளியிடப்பட்ட ஐந்து தினசரி சிறப்புத் தொகுப்புகளில் 1xBAT நிறுவனத்தின் இலச்சினை சுமார் 14 நிமிடங்கள் திரையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஆய்வு செய்த நேரத்தில், அந்த ஐந்து காணொளிகளும் மொத்தமாக 629,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருந்தன. காலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் சிறப்புத் தொகுப்புகளையும் இணைத்து பார்க்கும்போது, சுமார் இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்ற 10 காணொளிகளில் 1xBAT நிறுவனத்திற்கு மொத்தமாக சுமார் 25 நிமிடங்கள் விளம்பர வெளிப்பாடு கிடைத்ததாக அவர் மதிப்பிட்டுள்ளார்.
SSC டெஸ்ட் போட்டியின்போது விக்கெட்டுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை, எல்லைப் பகுதிகளில் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் ஸ்கிரீன் சைட் விளம்பரங்கள் மூலம் 1xBAT நிறுவனத்தின் அடையாளம் காட்சிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த டெஸ்ட் போட்டியின் அதிகாரப்பூர்வ சிறப்புத் தொகுப்புகள் தமது தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் இணையத்தளமும் உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது Parimatch Sports மற்றும் batbricks7 ஆகியவற்றின் விளம்பரங்களும் இடம்பெற்றதாக ஹட்டோட்டுவ சுட்டிக்காட்டியுள்ளார். இவை வெளிநாடுகளில் இயங்கும் சூதாட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மறைமுக நிறுவனங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இவ்வாறான விளம்பரங்கள் எவ்வாறு தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 1xbet.com உள்ளிட்ட பல சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
1xBAT என்பது 1xBet நிறுவனத்திற்கான மறைமுக விளம்பர நிறுவனமாகச் செயல்படுகிறது என ஹட்டோட்டுவ தெரிவித்துள்ளார். இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் செயலாளரும் முன்னதாக குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகார சபை சட்டத்தில், உரிமம் பெறாத இணையவழி சூதாட்டங்களின் செயற்பாடு மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைப் பிரதேசத்திற்குள் நடைபெறும் SLC போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இணையவழி சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதில் காணப்படும் பரந்தளவிலான பலவீனத்தை இந்த விவகாரம் வெளிப்படுத்துவதாக ஹட்டோட்டுவ தெரிவித்துள்ளார்.
சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை அதிகாரிகள் தடுத்து வரும் அதேவேளை, சூதாட்டத்துடன் தொடர்புடைய மறைமுக நிறுவனங்களின் விளம்பரங்கள் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புகள் மற்றும் சிறப்புத் தொகுப்புகள் ஊடாக பரந்தளவில் பொதுமக்களின் பார்வைக்கு தொடர்ந்து வருகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழுமையான ஆய்வறிக்கையைப் பார்க்க:
https://sanjanah.wordpress.









