இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசாங்கம் அத்தியாவசிய காசநோய் (TB) மருந்துகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, சுமார் 3 தொன் எடையுடைய இந்த மருந்துத் தொகுப்பில் 15 இலட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் உள்ளதுடன், அவற்றின் மதிப்பு சுமார் 52 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து கையளித்தார். பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனியும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள இந்த உதவியில், காசநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய முதல்நிலை மருந்துகள் அடங்குகின்றன.
இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் ஆதரவுடன் பெறப்பட்டுள்ள இந்த மருந்துகள், இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சை தடையின்றி தொடர்வதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதமும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 500 லீற்றர் தொழில்நுட்ப மலத்தியான் மருந்தை இந்தியா வழங்கியிருந்தது.
சுகாதாரத் துறையில் இந்தியாவின் இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்த சமீபத்திய உதவி, இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையின் கீழான மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும் என தெரிவித்துள்ளது.








