இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் எஸ். மயர், தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்குக் கிடைத்த கௌரவம் எனத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஜனநாயக அடித்தளத்தின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் அதிக செழிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா – இலங்கை பங்காண்மையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராக எரிக் மயர் பணியாற்றியுள்ளார்.
மேலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.









