அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
‘வினிவித’ அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக மற்றும் இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, குறித்த சட்ட மூலத்தை சவால் செய்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன உள்ளிட்டோரும் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறையாண்மை மற்றும் நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









