மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிகமாக அதிகரிக்கும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்பகுதிகளிலும் பலத்த காற்று
நீர்கொழும்பு முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
காற்று தென்மேற்கு திசையில் வீசுவதுடன், மணித்தியாலத்துக்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
முல்லைத்தீவு முதல் சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலுமான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பகுதிகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.









