நெல் களஞ்சியசாலையை நடத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் ரூ.40,000 இலஞ்சம் கோரி பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ரொஷான் குருகே, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அரச தரப்பு வலுவான வழக்கை முன்வைக்கத் தவறியுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
முறைப்பாட்டாளரான வர்த்தகர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் வழங்கிய சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆம் பிரிவின் கீழ், சட்டத்தரணி தர்ஷன குருப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சாட்சிகளை அழைக்காமலேயே சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
2022 நவம்பர் 10 முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், வர்த்தகர் மொஹமட் நலீமிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் தலா ரூ.20,000 வீதம், மொத்தமாக ரூ.40,000 இலஞ்சம் கோரியதாக ரொஷான் குருகே மீது நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வழக்கு விசாரணையின்போது மொஹமட் நலீமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சாட்சியமளித்தனர். எனினும், அவர்களின் சாட்சியங்களில் போதிய ஒற்றுமை இல்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டிய அளவுக்கு அரச தரப்பு வலுவான வழக்கை நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி தீர்மானித்துள்ளார்.








