சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவது கோளான சனி கிரகம், இன்று (04) மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் கிழக்கு வானில் பிரகாசமாகக் காணப்படவுள்ளது.
சூரியனைச் சுற்றி வர சனி கிரகம் சுமார் 29 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது. அதேவேளை, அது தன்னைத்தானே சுற்றிவர சுமார் 10 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.
சனியின் தனிச்சிறப்பு அதன் அழகிய வளையங்களாகும். பனித்துகள்கள் மற்றும் பாறைத் துகள்களால் உருவான இந்த வளையங்கள், தொலைநோக்கி மூலம் தெளிவாகக் காணக்கூடியவை. சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டனையும் தொலைநோக்கி மூலம் அவதானிக்க முடியும்.
சூரியன், பூமி மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் ‘எதிர்நிலை’ நிகழ்வின்போது, சனி கிரகம் வழக்கத்தை விட பிரகாசமாகத் தோன்றும்.
இன்று மாலை சூரியன் மறைந்த பின்னர், பொதுமக்கள் கிழக்கு வானத்தை நோக்கினால், மின்னாமல் நிலையாகத் தோன்றும் பிரகாசமான மஞ்சள் நிறப் புள்ளியாக சனி கிரகத்தைக் காண முடியும்.
தொலைநோக்கி இல்லாமலும் இதனை வெறும் கண்ணால் அவதானிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.








