ஊடக அறிக்கை 769
ஆதிவாசி மக்களின் உரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது
உலக ஆதிவாசிகள் தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
ஆதிவாசி மக்களின் உரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், பல ஆண்டுகளாக வேடர் இனத்தவரின் கோரிக்கையாக இருந்த ஆதிவாசிகள் சட்டமூலம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆதிவாசிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“ஆதிவாசிப் பாரம்பரிய மகப்பேறு மருத்துவச்சிமார்களைக் கௌரவித்தல், வாழ்க்கை மற்றும் நன்னடத்தையைப் பாதுகாத்தல்” எனும் கருப்பொருளின் கீழ் தம்பானை ஆதிவாசி மக்கள் பாரம்பரிய அருங்காட்சியக வளாகத்தில், ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெற்ற “உலக ஆதிவாசிகள் தினம் 2026” கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு, தம்பானை ஆதிவாசி வேடர் கிராமத்தில், மூலிகை மரக்கன்று ஒன்றை நட்டுவைத்த பிரதமர், அதனைத் தொடர்ந்து ஆதிவாசி மக்கள் பாரம்பரிய அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். பாரம்பரிய மகப்பேறு மருத்துவச்சிமார்களைப் பாராட்டி நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆதிவாசி வேடர் தலைவர் ஊருவரிகே வன்னிலாஅத்தோவினால் ‘இலங்கை ஆதிவாசி சமூகப் பிரகடனம்’ பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பிரதமர்,
ஆதிவாசி வேடர்கள் சூழலுடன் இணைந்து வாழ்ந்த, சூழலையே தங்களது இல்லமாகக் கொண்ட ஒரு சமூகத்தினராவர். கர்ப்பிணி விலங்குகளைக் கொல்லாமை, தேன் எடுக்கும்போது முழு தேன்கூட்டையும் அழிக்காமை, கிழங்குகளைத் தோண்டி எடுக்கும்போது மீண்டும் முளைக்கும் பகுதியை மண்ணிலேயே இருக்க விடுதல் போன்ற எளிய ஆனால் ஆழமான சூழல்நட்புப் பழக்கவழக்கங்கள் அவர்களின் வாழ்க்கை முறையிலேயே கலந்திருந்தன.
முன்னாள் ஆதிவாசி வேடர் தலைவர் திசாஹாமி அத்தோவிற்கு ஒருமுறை நாட்டின் தலைவரொருவர் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம், காணி ஆகியவற்றை வழங்குவதற்காக விடுத்த அழைப்பை, வேடர் சமூகக் கலாசாரத்தின் பாதுகாப்பு மற்றும் வேடர் பரம்பரையின் எதிர்கால இருப்புக்காக அவர் நிராகரித்திருந்தார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தனிப்பட்ட சலுகைகளின் பின்னால் செல்லும் ஒரு சமூகத்தில் அவரின் அந்தத் தியாகம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். நமது எதிர்கால சந்ததியினருக்குச் சூழலை நேசிக்கும் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமாயின், நாம் வேடர் சமூகத்தின் எளிமையான வாழ்க்கை முறை மற்றும் சூழல்நேயப் பழக்கவழக்கங்களிலிருந்து முன்னுதாரணங்களைப் பெற வேண்டும்.
நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைப் பிரகடனப்படுத்துதல் போன்ற விடயங்களால், ஆதிவாசி வேடர் சமூகம் தங்களது பாரம்பரியக் காட்டு நிலங்களையும் சுதந்திரமான வாழ்க்கை முறையையும் இழக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
ஆதிவாசி வேடர்களின் அடையாளம், பாரம்பரிய சுதேச அறிவு மற்றும் பாரம்பரிய உரிமைகள் என்பன இன்று அழிந்துபோகும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. ஒரு அரசாங்கம் என்ற வகையிலும் சமூகம் என்ற வகையிலும் நாம் இந்தப் பிரச்சினையை மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பார்க்க வேண்டும்.
அபிவிருத்தி என்பது ஆதிவாசி வேடர்களின் பாரம்பரிய உரிமைகளை அழிப்பது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகளின் ஆதிவாசிகள் உரிமைகள் பற்றிய பிரகடனத்திற்கு அமைவாக, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டியது நம் அனைவரினதும் முதன்மைக் கடமையாகும்.
அரசாங்கம் என்ற வகையில் ஆதிவாசி வேடர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நிலையான வாழ்வாதாரம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளையில், அவர்களின் பாரம்பரிய நிலவுரிமையையும் கலாசாரச் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
பல ஆண்டுகளாக ஆதிவாசி வேடர் தலைவர் உள்ளிட்ட வேடர் மக்கள் தமக்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பாக பல்வேறு அரசாங்கங்களுடன் கலந்துரையாடிய போதிலும், அது இதுவரை நிறைவேறவில்லை. ஆயினும் நமது அரசாங்கம், குறிப்பாகக் கௌரவ அமைச்சர் சுனில் செனவி அவர்களின் தலையீட்டினால், ஆதிவாசிகள் சட்டமூல வரைவு தற்போது அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. சட்டமூலமொன்றை நிறைவேற்றுவதோடு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்பட வேண்டும்.
அத்தோடு அது, நடைமுறையிலுள்ள சட்டங்களுடன் முரண்படாத வகையில் சட்டப் பின்னணியை உறுதிசெய்து முன்னெடுக்க வேண்டிய ஒரு சிக்கலான செயற்பாடாகும். அதற்குத் தேவையான குழுக்களை நியமித்து, இந்த வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட சட்டமூலம் குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதேபோன்று, சுற்றாடல் அமைச்சரின் தலைமையில், வேடர் சமூகம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் காட்டிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெறுதல், ஆதிவாசி வேடர்களைப் பதிவுசெய்தல், சட்டப்பூர்வ அடையாள அட்டையை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. இதுவரை ஆதிவாசி வேடர்கள் எதிர்கொண்ட பல பிரச்சினைகளுக்கு இதன் மூலம் நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கப்பெறுவதுடன், ஆதிவாசி வேடர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கையை வழமை போல் முன்னெடுத்துச் செல்லவும் இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்க இருக்கின்றது.
நமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டை மாற்றத்தை நோக்கிய யுகத்திற்குக் கொண்டுசெல்வதற்காகப் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சமீபத்தில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஆதிவாசி வேடர் சமூகமும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் சிறப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்திய போதிலும், சில பகுதிகளில் அரச பொறிமுறையில் காணப்பட்ட தாமதங்கள் மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக நிவாரணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டு, நிவாரணங்களை வழங்குவதை விரைவுபடுத்தத் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையர் என்ற அடையாளத்தையும், சுற்றாடலையும் பாதுகாத்து, சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யும் ஆதிவாசி வேடர் சமூகத்திற்கு உரிய கௌரவத்தை வழங்கி, அவர்களின் உரிமைகளுக்காக உண்மையிலேயே குரல்கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு கருத்துத் தெரிவித்த ஆதிவாசி வேடர் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலாஅத்தோ,
“ஒரு நாட்டின் இருப்பிற்குச் சட்டதிட்டங்கள் அவசியமாகும். ஆயினும் அச்சட்டங்களை உருவாக்கும்போது நாட்டின் மக்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்கள் குறித்துக் கவனத்தில் கொண்டு சட்டங்களை உருவாக்க வேண்டும். நாம், இதற்கு முன்னரும் பல அரசாங்கங்களுடன் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினோம். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. சட்டப்பூர்வ நிலைமைகள் காரணமாக நமது ஆதிவாசி வேடர்களுக்குப் பாரிய அளவிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சில அரசாங்கங்கள் எங்களைப் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று எமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடின, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடின, ஆனால் அந்த அரசாங்கங்கள் மாறியதே தவிர நமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் நாம் நமது பிரச்சினைகளை முன்வைத்திருக்கின்றோம்; நமது பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்துமாறும், அச்சட்டங்களை உருவாக்கும்போது எமது கருத்துக்களைக் கருத்தில் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல, மாவட்டச் செயலாளர் சுனில் கலகம உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பெருந்திரளான ஆதிவாசி மக்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு









