அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு போலி கடவுச்சீட்டு பெற உதவியதாகக் கூறப்படும் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (07) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், பிரதான சந்தேகநபருக்காக போலி கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு தனது கைரேகைகளை வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிரதான சந்தேகநபர் வெளிநாடு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 பெப்ரவரி 13ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







