அப்ரா அன்சார்
கொழும்பு; அக்குரணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குருந்துகஹஎல தேர்தல் வட்டாரத்தில் சுமார் ரூ.4.5 மில்லியன் பெறுமதியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரதேசத்தின் முன்னுரிமைகளை கருத்திற்கொண்டு, வடிகால் கட்டமைப்பை சீரமைத்தல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இந்தத் திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி, தலகஹகந்த பகுதியில் பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் ரூ.1.5 மில்லியன் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பை சீரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உக்கல பகுதியில் பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் ரூ.2 மில்லியன் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பை சீரமைக்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்கல பகுதியில் DCB நிதியின் கீழ் ரூ.1 மில்லியன் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கல் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 90 குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளன.
அக்குரணை DCC தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியாஸ் பாரூக் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கேற்புடன் குறித்த அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தோழர் தாரிக் அலி, அக்குரணை பிரதேச சபையின் வட்டாரப் பிரதிநிதி தோழர் பஸ்மினா நிசாமுதீன், உக்கல கிராம அலுவலர் பிரிவின் பிரஜா சக்தி குழுத் தலைவர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களின் பங்கேற்புடன் அக்குரணை பிரதேசத்தில் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











