ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு தெற்கே அமைந்துள்ள துரா அரச வைத்தியசாலையின் வெளிப்புற வளாகத்திற்குள் இஸ்ரேலியப் படையினர் அத்துமீறி நுழைந்து, பொலிஸாருக்காக ஒதுக்கப்பட்ட அறையொன்றைச் சோதனையிட்டுள்ளனர்.
இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைக்கு பலஸ்தீன சுகாதார அமைச்சு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறும் செயல் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ நிலையங்கள், நோயாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சட்டங்களை இத்தகைய நடவடிக்கைகள் மீறுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், வைத்தியசாலைகளுக்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைவது நோயாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், சுகாதார சேவைகளைப் பாதிப்பதோடு மருத்துவ நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் புனிதத்தன்மையையும் மீறும் செயலாகும் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.







