அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை மற்றும் தடைகள் காரணமாக ஈரானின் பொருளாதாரம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ஈராக்குடனான பொருளாதார உறவு ஈரானுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
மத்திய கிழக்கு உலகளாவிய விவகாரங்களுக்கான பேரவையின் மூத்த ஆய்வாளரான முஹனத் செலூம், அல் ஜசீராவுக்கு வழங்கிய கருத்தில், ஈரானின் பொருளாதாரத்திற்கு ஈராக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக விளங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
“பொருளாதார முற்றுகைக்கு மத்தியில் ஈரானுக்கு நிலம் வழியாக வர்த்தகம் மேற்கொள்வதற்கான முக்கிய பாதையாக ஈராக் விளங்குகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் ஈராக்கிய வர்த்தகர்கள் சுமார் 11.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஈரானியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். இது ஈரானின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்காகும்.
மேலும், ஈராக்கின் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தின் மூலம் ஆண்டுதோறும் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈரானுக்குக் கிடைப்பதாகவும், ஈராக்கிய வங்கிகள் தடைகளைத் தவிர்த்து ஈரான் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எரிசக்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் தரவுகளின்படி, ஈரானிலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள், ஈராக்கின் மொத்த மின்சார உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதத்திற்குப் பங்களிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுக்கும் ஈரானுக்கு எதிரான பொருளாதார முற்றுகையில் ஈராக் ஒரு முக்கியமான இடைவெளியாக இருப்பதாக முஹனத் செலூம் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஈராக்கின் இந்த வர்த்தகப் பாதையை மூடுவதற்கு அமெரிக்கா தனது படைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த நடவடிக்கை வாஷிங்டனின் பொருளாதார முற்றுகை உத்தியுடன் நேரடியாகப் பொருந்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈராக் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது.ஈராக்கின் எண்ணெய் வருமானம் நியூயோர்க்கில் உள்ள அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் வைப்புச் செய்யப்படுகின்றது.
ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈராக் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் ஈராக்கிற்கு வழங்கப்படவிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றத்தை அமெரிக்கா இடைநிறுத்தியிருந்தது.
இதேவேளை, ஈராக்கின் அரச செய்தி நிறுவனமான INA மேற்கோள் காட்டியுள்ள உளவுத்துறை ஆவணமொன்றில், கிர்குக் மற்றும் சுலைமானியா மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களிலிருந்து தாங்கி வாகனங்கள் மூலம் மசகு எண்ணெய் ஈரானுக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஈரானிய மசகு எண்ணெயுடன் கலக்கப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் மீதான சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த உளவுத்துறை ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.








