அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருவியாக ஈராக் மாறக்கூடாது என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகரும் உதவியாளருமான மொஹமட் மொக்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக்கிய எண்ணெய் கடத்தலைத் தடுப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், அனைத்து ஆயுதங்களையும் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி முன்னெடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பாராட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், மொஹமட் மொக்பர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எண்ணெய் கடத்தல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழிருந்த சிரியா மற்றும் ஈரானுடனான இரண்டு எல்லைக் கடவைகள் புதன்கிழமை ஈராக்கிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஈரானின் வெளிநாட்டுக் கொள்கையானது அண்டை நாடுகளுடன் பொதுவான எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்வதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளதாக மொஹமட் மொக்பர் தெரிவித்துள்ளார்.
“மிகவும் இருண்ட காலங்களிலும் ஈரான் தனது முழு பலத்துடன் ஈராக் மக்களுக்குத் துணையாக நின்று தனது நட்பை நிரூபித்துள்ளது.
இந்த முறியடிக்க முடியாத உறவைக் கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளில் ஒரு கருவியாகவும், குற்றவாளியான ட்ரம்பின் கொள்கைகளைச் செயற்படுத்தும் சாதனமாகவும் ஈராக் மாறிவிடாமல் இருப்பதற்கு எல்லை விவகாரங்களில் பாக்தாத் விழிப்புடன் செயற்பட வேண்டும்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








