இந்தியாவின் பிரவாசி பாரதிய திவாஸ் (Pravasi Bharatiya Divas – PBD) 2027 நிகழ்வை முன்னிட்டு, ரீல்ஸ் (Reel) போட்டியொன்றை இந்தியா அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வெற்றியாளர்களுக்கு 10 நாள் இந்தியச் சுற்றுப்பயணத்திற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) இந்தப் போட்டி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘இந்தியா எனக்கு எதைக் குறிக்கிறது?’ (What India means to me) என்ற கருப்பொருளில், இந்தியாவுடனான தங்களது தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் காணொளியொன்றை உருவாக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
#IndiaInMe எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரீல்ஸ் போட்டி கடந்த நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி இரவு 11.59 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியினர் (NRIs, OCIs, PIOs) மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட அனைவரும் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
இதற்காக, Apple App Store மற்றும் Google Play Store ஆகியவற்றில் கிடைக்கும் BharatVerse செயலியில் பதிவு செய்து, #IndiaInMe Reel Contest என்பதைத் தெரிவுசெய்ய வேண்டும்.
அதன்பின்னர், ‘இந்தியா எனக்கு எதைக் குறிக்கிறது?’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, அதிகபட்சம் 30 விநாடிகள் கொண்ட செங்குத்து வடிவிலான Instagram ரீல்ஸ் காணொளியொன்றை உருவாக்க வேண்டும்.
குறித்த காணொளியை #IndiaInMe என்ற ஹேஷ்டேக்குடன் Instagram இல் பதிவிடுவதுடன், @bharatversequiz என்ற கணக்கை இணை வெளியீட்டாளராகவும் (Collaborator) சேர்க்க வேண்டும்.
இணை வெளியீட்டுக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு எவ்விதக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்பதுடன், நுழைவுக் கட்டணம், கொள்வனவு அல்லது அதிர்ஷ்டக் குலுக்கல் முறையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.








