ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்து செயற்பட்டு, அவுஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு அவுஸ்திரேலியா பயங்கரவாத நிதியுதவி தடைகளை விதித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங், இந்தத் தடைகளுக்கு உள்ளான இருவரும் சோஹைர் ஹசிப் (Zohair Hassib) மற்றும் காசெம் ஹமாத் (Kazem Hamad) என அடையாளம் காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டு சிட்னியில் அமைந்துள்ள யூதர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் மற்றும் மெல்போர்னில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களில் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தடைகளின்படி, குறித்த இருவருக்கும் நிதி வழங்குவது அல்லது அவர்களின் சொத்துக்களுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது குற்றமாகும். இதனை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஈரான், அவுஸ்திரேலியாவில் உள்ள யூத இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா தனது நாட்டில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC) பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்பாக அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போதைய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, ஈரானியத் தூதுவரையும் மேலும் மூன்று இராஜதந்திரிகளையும் நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது.
எனினும், அவுஸ்திரேலியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








