இலங்கையில் அமைதி மற்றும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான ‘சமூக உரையாடல்’ (Social Dialogue) திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களை எடுப்பதில் பங்களிப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில் அரச துறை உரையாடலுக்கான முதலாவது தேசியக் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் சமூக உரையாடல் தொடர்பான பிரகடனமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கூட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளின்போது அதிகரித்த வரிகள் மற்றும் பொருட்களின் விலைகள், மக்களின் கொள்வனவுச் சக்தி வீழ்ச்சியடைந்தமை, தொடர்ச்சியான வறுமை ஆகியவற்றால் குடும்பங்கள் எதிர்கொண்ட அழுத்தங்கள் இன்னும் நீடிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரையாடலின் ஊடாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மோதல்கள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார மீட்சியின் ஊடாகச் சிறந்த அரச சேவை, பணியிடங்களில் நியாயமான சூழல் மற்றும் தமது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்வதற்கான அதிக வாய்ப்புகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பிரச்சினைகள் தீவிரமடைந்து சமூகப் பிளவுகளாக மாறுவதற்கு முன்னர், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக மக்களை ஒன்றிணைத்து உரையாடலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.








