வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (25) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இணையாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அதன் முதலாவது வரவு செலவுத் திட்டம் முதல் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு இருந்த உரிமைகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வருவதே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு இதுவரை திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினைகளில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பிரதான ஒன்பது தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாகவும், பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.








