கவந்திஸ்ஸ யானை வயிற்றுப்போக்கால் உயிரிழந்ததாகத் தாம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
யானையின் உயிரிழப்புக்கான சரியான காரணத்தைப் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையின் சிங்கள மொழி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், கவந்திஸ்ஸ யானை வயிற்றுப்போக்கினால் உயிரிழந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், தாம் அவ்வாறான எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர், தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் யானையின் உயிரிழப்புக்கான காரணத்தைத் தம்மாலோ அல்லது வேறு எவராலோ தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
யானை வயிற்றுப்போக்கு, துப்பாக்கிச் சூட்டுக் காயம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்ததா என்பதை அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்றும், அதற்கான இறுதி முடிவு பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யானையின் உயிரிழப்பு தொடர்பான முடிவுகள் ஊகங்கள் அல்லது தனிப்பட்ட அனுமானங்களின் அடிப்படையில் அல்லாமல், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தாம் தெரிவிக்காத கருத்துக்களைத் தமக்குச் சொந்தமானதாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிடுவது தவறான தகவல்கள் பரவுவதற்கும் பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, குறித்த நாளிதழ் தவறான செய்தியைத் திருத்துவதுடன், அமைச்சரின் உண்மையான நிலைப்பாட்டை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவத்துடன் இந்தத் திருத்தத்தையும் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.







