பெருந்தோட்ட சமூக மக்களுக்காக பதுளை மாவட்டத்தில் 11 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், ஒவ்வொரு வீட்டுக்கும் 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, பதுளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெவெவெஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள தெபெத்த தோட்டத்தில் 11 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெருந்தோட்ட சமூக மக்களுக்கு பாதுகாப்பான வீட்டு உரிமையை வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைத் திட்டத்திற்கு அமைவாகவும் இவ்வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








