நியூயோர்க் மாநில செனட் சபைக்கும் மாநில சட்டமன்றத்துக்கும் தெரிவு செய்யப்பட்ட முதல் பலஸ்தீனப் பெண் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அபர் கவாஸ் படைத்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
34 வயதான ஜனநாயக சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அபர் கவாஸ், நியூயோர்க் மாநிலத்தின் 12ஆவது தேர்தல் மாவட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கோன் டோவை எதிர்த்துப் போட்டியிட்டு 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
வடமேற்கு குயின்ஸ் பகுதியை உள்ளடக்கிய இந்தத் தேர்தல் மாவட்டம், நியூயோர்க் நகரின் மிகப்பெரிய அரபு சமூகங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அபர் கவாஸ், நியூயோர்க் செனட் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பிரதிநிதியை மக்கள் தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்துத் தனது வரலாற்று வெற்றியைக் கொண்டாடினார்.
நியூயோர்க் நகர மேயர் ஸொஹ்ரான் மம்தானி மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பு (DSA) ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற அபர் கவாஸ், ஆரம்பத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடத் தயக்கம் காட்டியுள்ளார்.
பலஸ்தீன விடுதலைக்கான தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
எனினும், மாறிவரும் அரசியல் சூழலும் பலஸ்தீன உரிமைகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தன்னை ஊக்குவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1948 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பலஸ்தீனத்திலிருந்து இடம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த அபர் கவாஸ், அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்ட குடும்பத்தில் வளர்ந்துள்ளார்.
அவரது சிறுவயதில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவினரால் (ICE) அவரது தந்தை தடுத்து வைக்கப்பட்ட சம்பவம், சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அவரது ஆர்வத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
1,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட அவரது தேர்தல் பிரசாரம், மலிவு விலை வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் பலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஆகிய விடயங்களை மையமாகக் கொண்டிருந்தது.
இதற்கு முன்னர், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்புகள் ஆதரவளிப்பதைத் தடுக்கும் சட்டமூலத்தை உருவாக்குவதில் ஸொஹ்ரான் மம்தானியுடன் இணைந்து அபர் கவாஸ் பணியாற்றியுள்ளார்.
அல் ஜசீராவின் தகவலின்படி, மாநில செனட் உறுப்பினராக அவர் முன்னுரிமை அளிக்கவுள்ள முதலாவது விடயங்களில் ஒன்று, 2023ஆம் ஆண்டு மம்தானியுடன் இணைந்து வரைந்த ‘Not on Our Dime!’ சட்டமூலத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும்.
மாநில சட்டமன்றத்தில் சிறுபான்மை அரசியல் இயக்கத்தின் பிரதிநிதியாகச் செயற்படுவதில் பல்வேறு சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அபர் கவாஸ், மாற்றத்தை ஏற்படுத்துவதில் அடிமட்ட மக்கள் இயக்கங்களின் வலிமை மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பலஸ்தீன ஆதரவு மற்றும் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர்கள் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வரும் சூழலில், அபர் கவாஸின் வெற்றியும் அமைந்துள்ளது.
இது பலஸ்தீன உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு அமெரிக்க அரசியலில் அதிகரித்து வரும் ஆதரவின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
(மூலம்: அல் ஜசீரா)







