சந்தையில் செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை எதிர்காலத்தில் 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களைத் துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் சந்தையில் செத்தல் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 120 செத்தல் மிளகாய் கொள்கலன்கள் சுங்கக் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, சுங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட உரிய கொடுப்பனவுகளைச் செலுத்தியுள்ளதுடன், பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.
எனினும், தரம் தொடர்பான பிரச்சினை காரணமாகக் குறித்த கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுமார் 1,050 ரூபாவாகக் காணப்பட்ட செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் விலை தற்போது 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விலை மேலும் அதிகரித்து 2,500 ரூபாவையும் தாண்டக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, செத்தல் மிளகாயின் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக மிளகாய்த்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மூலப்பொருட்கள் கிடைக்காததால் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வர்த்தகர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சுங்கக் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் தொகைகளை விடுவிப்பதற்கு தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் துரித பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








