இலங்கையில் எதிர்வரும் 2027 ஜனவரி 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை எக்ஸ்போ 2027 சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஊக்குவிக்கும் நோக்கில், சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாண வர்த்தக சபையில் (Asharqia Chamber) சவூதிக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் உரையாற்றியுள்ளார்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி தம்மாமில் அமைந்துள்ள அச்சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய அஷார்கியா வர்த்தக சபையின் முதலாவது உப தலைவர் ஹமத் பின் முஹம்மத் அல்-அம்மார் அல்-காலிதி, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வளர்ந்து வரும் வர்த்தக உறவுகள் குறித்துக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இரு நாடுகளினதும் தனியார் துறைகளுக்கு இடையிலான விரிவடைந்து வரும் தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இலங்கை எக்ஸ்போ 2027 கண்காட்சியை ஊக்குவிப்பதற்கும் இலங்கைத் தூதரகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது சபையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதன்போது, அஷார்கியா வர்த்தக சபையின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கையின் முதன்மையான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியான ‘இலங்கை எக்ஸ்போ 2027’ தொடர்பான விரிவான விளக்கமளிப்பை வழங்கினார்.
இக்கண்காட்சியானது இலங்கையின் பல்வேறு உற்பத்திப் பொருட்கள், சேவைகள் மற்றும் வர்த்தக ஆற்றல்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சர்வதேச கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் நேரடி வர்த்தகத் தொடர்புகளை (B2B) ஏற்படுத்துவதற்கும், புதிய வர்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் இந்தக் கண்காட்சி வாய்ப்பளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளினதும் வர்த்தக சமூகங்களை இணைக்கும் நிரந்தரப் பாலமாக அண்மையில் நிறுவப்பட்ட இலங்கை – சவூதி அரேபியா கூட்டு வர்த்தக சபையின் (Joint Business Council) முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஊக்குவிப்பு நிகழ்வு, இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், தனியார் துறையினருக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கை எக்ஸ்போ 2027 கண்காட்சியில் சவூதி அரேபிய நிறுவனங்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக அமைந்தது.
குறிப்பாக, கைத்தொழில், விவசாயம் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், கொள்வனவாளர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண வர்த்தகப் பிரதிநிதிகளின் பங்கேற்பை அதிகரிப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை எக்ஸ்போ 2027 கண்காட்சியில் சவூதி அரேபியாவின் வலுவான வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவை வரவேற்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வை இலங்கைத் தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான முதலாம் செயலாளர் தஷ்மா விதானவாசம் ஒருங்கிணைத்திருந்தார்.
மூலம்: ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம்








