ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகியவை, காற்றுப்பை (Airbag) ஊதிப்பெருக்கிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை மீள அழைக்கத் தீர்மானித்துள்ளன.
டகாட்டா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட காற்றுப்பை ஊதிப்பெருக்கிகள் வெடிக்கும் அபாயம் காணப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (20) இந்த மீளழைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA) தகவலின்படி, காற்றுப்பைகள் செயற்படும்போது அவற்றின் ஊதிப்பெருக்கிகள் வெடித்து, கூர்மையான உலோகத் துண்டுகள் வாகனத்தின் உட்பகுதியில் சிதறக்கூடும். இதனால் சாரதிகள் மற்றும் பயணிகளுக்குப் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.
இதன்படி, ஹோண்டா மற்றும் அதன் துணை நிறுவனமான அகுரா (Acura) ஆகியவற்றின் சுமார் 810,592 வாகனங்கள் மீள அழைக்கப்படுகின்றன. அதேவேளை, டொயோட்டா மற்றும் லெக்சஸ் (Lexus) நிறுவனங்களின் குறிப்பிட்ட சில வாகனங்களும் இந்த மீளழைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டகாட்டா காற்றுப்பை ஊதிப்பெருக்கிகளில் பயன்படுத்தப்படும் இரசாயன உந்துசக்தி நீண்டகாலமாக வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு உட்படுவதால் சிதைவடைந்து நிலையற்ற தன்மையை அடைவதே இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டகாட்டா காற்றுப்பைகள் தொடர்பான இந்தப் பாதுகாப்புப் பிரச்சினை உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக நீடித்து வருகின்றது.
கடந்த பத்தாண்டுகளில், உலகளாவிய ரீதியில் 10 கோடிக்கும் அதிகமான டகாட்டா காற்றுப்பை ஊதிப்பெருக்கிகளைக் கொண்ட வாகனங்கள் மீள அழைக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 6.7 கோடி வாகனங்கள் உள்ளடங்குகின்றன.
எனினும், அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள மீளழைப்பில் உள்ளடங்கும் வாகனங்கள் தொடர்பில் இதுவரை விபத்துகள், காயங்கள் அல்லது காற்றுப்பை ஊதிப்பெருக்கிகள் வெடித்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட வாகனங்களில் உள்ள ஊதிப்பெருக்கிகளைப் புதியவற்றைக் கொண்டு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஹோண்டா நிறுவனத்தின் மீளழைப்பில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட அக்கோர்ட் (Accord), சிவிக் (Civic), சிஆர்-வி (CR-V), அகுரா ஐஎல்எக்ஸ் (Acura ILX) மற்றும் அகுரா ஆர்டிஎக்ஸ் (Acura RDX) ஆகிய வாகனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, டொயோட்டா நிறுவனத்தின் மீளழைப்பில் குறிப்பிட்ட கொரோலா (Corolla), டன்ட்ரா (Tundra), செகோயா (Sequoia), 4ரன்னர் (4Runner) மற்றும் லெக்சஸ் வாகனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டொயோட்டாவின் இந்த மீளழைப்பு உலகளாவிய ரீதியில் சுமார் 790,000 வாகனங்களைப் பாதிக்கின்றது. அவற்றில் 314,000 வாகனங்கள் அமெரிக்காவில் உள்ளன.
பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கான மாற்று ஊதிப்பெருக்கிகள் 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கப்பெறும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







