முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தன்மைக்குத் தீர்வாக, முடி வளர்ச்சியைத் தூண்டும் புதிய வகை மின்சாரச் சீப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி ஆய்வக எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வெறும் 28 நாட்களில் சுமார் 98 சதவீதம் முடி வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங்கில் உள்ள பெய்ஹாங் பல்கலைக்கழகம் மற்றும் ஹொங்கொங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். ‘Detangle’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சாரச் சீப்பு, மென்மையான மின் தூண்டுதலையும், முடி வேர்க்கால்களுக்கு நேரடியாகச் சிகிச்சை மூலக்கூறுகளைச் செலுத்தும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது.
நவம்பர் 3ஆம் திகதி ‘Nature Communications’ என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக முடி உதிர்வுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும்பாலும் தோலின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தப் புதிய மின்சாரச் சீப்பில் பொருத்தப்பட்டுள்ள நுண்ணிய மின்முனைகள் மூலம் மின் அலைகள் உருவாக்கப்பட்டு, சிகிச்சை மூலக்கூறுகள் தோலின் ஆழமான பகுதிகளுக்கும் முடி வேர்க்கால்களுக்கும் சென்றடைய உதவுகின்றன.
குறிப்பாக, மரபணு மற்றும் ஹோர்மோன் காரணிகளால் ஏற்படும் வழுக்கைத் தன்மை (Androgenetic Alopecia) செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆய்வக எலிகளிடம் இந்தச் சாதனம் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, மின் தூண்டுதல் மற்றும் சிகிச்சை முறையை இணைத்துப் பயன்படுத்திய எலிகளுக்கு 28 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை வழங்கப்பட்ட பகுதியில் சுமார் 97.85 சதவீத முடி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதே காலப்பகுதியில், முடி உதிர்வுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மினொக்சிடில் (Minoxidil) மருந்தைப் பயன்படுத்திய எலிகளுக்கு சுமார் 70 சதவீத முடி வளர்ச்சியே பதிவாகியுள்ளது.
இந்த முடிவுகள், வழக்கமான வெளிப்புற சிகிச்சை முறைகளைக் காட்டிலும் புதிய தொழில்நுட்பம் அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், அன்றாடம் பயன்படுத்தும் சீப்பிலேயே இந்தத் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம் முடி உதிர்வுக்கான சிகிச்சையை எளிதாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எனினும், இந்தச் சாதனம் தற்போது பரிசோதனை நிலையிலேயே உள்ளது. மனிதர்களிடம் இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் இன்னும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே, மனிதர்களுக்கான மருத்துவப் பயன்பாட்டுக்கு இதனை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மேலதிக ஆய்வுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் அவசியமாகும்.
உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வழுக்கைத் தன்மைக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.








