இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சியடையக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே, கடந்த சில வருடங்களாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து பேணுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 முதல் 4 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகக் காணப்படுவதைப் புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அத்துடன், 2027, 2028 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகக் குறையும். எனவே, இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கடினம் என்பது தெளிவாகிறது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 8 சதவீதத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரமே கடந்துள்ளது. 1978ஆம் ஆண்டிலும், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சி வேகத்தை அடைய முடிந்தது.
எனினும், அந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுவது கடினமாக இருந்தது. கடந்த 40 முதல் 50 வருடங்களாக முதலீடுகளைத் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளோம். ஆனால், முதலீடுகள் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்ப பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொள்வது சவாலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்துள்ளது” என்றார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தென்கொரியாவுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1960ஆம் ஆண்டில் தென்கொரியாவின் தனிநபர் வருமானம் 156 அமெரிக்க டொலர்களாகவும், இலங்கையின் தனிநபர் வருமானம் 146 அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.
ஆனால், இன்று இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. தென்கொரியாவின் தனிநபர் வருமானம் தற்போது சுமார் 36,200 அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த ஆண்டு 5,002 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதன்படி, தென்கொரியாவின் தனிநபர் வருமானம் இலங்கையை விட ஏழு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
இலங்கைக்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) தொடர்பான முறையான திட்டம் அல்லது அறிக்கை 2013ஆம் ஆண்டிலேயே சுயாதீனமாகத் தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டம் அப்போதே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று நாட்டின் நிலைமை முற்றிலும் மாறியிருக்கும்.
எனினும், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு நாட்டின் அரசியல் உறுதியற்ற தன்மையே காரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் மாறுவதால், ஒரு கொள்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது கடினமாகியுள்ளது. அடுத்ததாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர்வதற்குப் பதிலாகப் புதிதாக ஆரம்பிக்கிறது.
அரசியல் உறுதியற்ற தன்மை உண்மையில் பாரிய பிரச்சினையாகும். ஒரு திட்டம் வகுக்கப்பட்டால், அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.








