இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள ‘நில்திய பொக்குன’ பகுதியைப் பார்வையிடுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நில்திய பொக்குன பகுதிக்கான சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் உத்தியோகபூர்வமாகவும் முறையாகவும் ஆரம்பிக்கப்படும் வரை, அப்பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிலர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உரிய அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை நில்திய பொக்குன பகுதிக்கு அழைத்துச் செல்வதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உரிய அனுமதிப்பத்திரம் மற்றும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் பங்களிப்பு இன்றி, எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள நில்திய பொக்குன பகுதியில், அரசாங்கத்தின் முறையான ஒழுங்குமுறைப் பொறிமுறையின் கீழ் சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








