2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சியின் ஆரம்ப உரையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டமைக்கான காரணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விளக்கியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியின் வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றி வந்த நிலையில், இம்முறை அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலின்போது கருத்துத் தெரிவித்த அவர், வழமைபோன்று இம்முறையும் எதிர்க்கட்சியின் ஆரம்ப உரையைத் தாமே நிகழ்த்துவார் என எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பித்துள்ளதால், அதற்குப் பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே எதிர்க்கட்சியின் ஆரம்ப உரையை நிகழ்த்துவது பொருத்தமானது எனக் கட்சித் தலைமை தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவரின் இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் ஜனாதிபதியே வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்த நிலையில், தற்போது மட்டும் ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசியல் தீர்மானங்கள் அந்தந்தக் காலகட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் அந்தந்த நேரத்தில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். நாம் ஓர் அரசியல் கட்சி. இது கட்சியின் பொதுவான தீர்மானமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதற்கு மூன்று நாட்கள் தாமதம் ஏற்பட்டதால், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மேலதிகமாக ஆராய்ந்து படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததாக அவர் முன்னர் தெரிவித்த கருத்து குறித்தும் நேர்காணலின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக வழமையாகத் தாமே எதிர்க்கட்சியின் வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வந்ததாக மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இம்முறை கட்சியாக ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுவது அவசியமாகியிருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த மாற்றம் கட்சியின் கூட்டுத் தீர்மானம் எனவும், இது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.








