பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளதுடன், அவசர மருத்துவ சிகிச்சை வழங்கவும், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவும் அந் நாட்டின் உயர் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 16, 2026 திகதியிடப்பட்ட இந்தத் திறந்த கடிதத்தை, தனது சட்டத்தரணியான பேரிஸ்டர் சல்மான் சஃப்தார் ஊடாக அவர் சமர்ப்பித்துள்ளார்.
74 வயதான இம்ரான் கான், தனது இரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் மூளையில் இரத்தக்கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது இரத்த அழுத்தம் ஆரம்பத்தில் 130 ஆக இருந்த நிலையில், பின்னர் 150, 170 என அதிகரித்து, நவம்பர் 10ஆம் திகதி 192 மற்றும் 193 என்ற அளவை எட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இதயமும் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
“74 வயதில், இவ்வாறு இடைவிடாது தொடரும் நிலைமை என்னை உயிருடன் மீண்டு வர முடியாத ஒரு நிலைக்குக் கொண்டு செல்கிறது” எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தலைமை நீதிபதிகளுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் 11ஆம் திகதி அடியாலா சிறையில் இம்ரான் கானுக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையில் இடம்பெற்ற மூன்று மணிநேர சந்திப்பைத் தொடர்ந்து இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 2025 டிசம்பர் 20ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் வரை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான அணுகல் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பில் தனது குடும்பத்தினருக்கும் சட்டப் பிரதிநிதிகளுக்கும் முறையான தகவல் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
விழித்திரை அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அவரது பார்வை நிரந்தரமாகப் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், விசேட மருத்துவப் பரிசோதனைகளுக்காக இம்ரான் கானை ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றவும், குடும்பத்தினருடன் வழக்கமான தொடர்புகளைப் பேண அனுமதிக்கவும் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026ஆம் ஆண்டில் தனது சட்டத்தரணியை நான்கு தடவைகள் மாத்திரமே சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும், தனது மனைவிக்கு அவரது சட்ட ஆலோசகரை ஒரே ஒரு தடவை மாத்திரமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறை அதிகாரிகள் தனது அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாகவும், தனக்கு எதிராகத் தொடரப்படும் குற்றவியல் வழக்குகளில் முறையாகத் தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனக்கு விசேட சலுகைகளோ அரசியல் ரீதியான அனுகூலங்களோ தேவையில்லை என்றும், உரிய மருத்துவ சிகிச்சையும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதுமே தனது கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“நான் உயிருடன் இருந்தால் மட்டுமே எனது நிரபராதித்துவத்தை நிரூபிக்க முடியும்” எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு குற்றவியல் வழக்குகள் மற்றும் தண்டனைகளை எதிர்கொண்டுள்ளதுடன், இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவரும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
எனினும், மருத்துவப் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்தி நிறுவனத்தின் படி, இம்ரான் கான் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எட்டு தடவைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மற்றும் இரத்த அழுத்த அளவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.










