பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 ரூபா முதல் 45 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமை மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளமை ஆகியன இந்த விலை உயர்வுக்கான பிரதான காரணங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக மழை காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால், முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னர் 80 சதவீதமாகக் காணப்பட்ட முட்டை உற்பத்தி தற்போது 50 முதல் 60 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
மேலும், முட்டை உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளும் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக உற்பத்திச் செலவு மேலும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரி உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பேக்கரிகளுக்கான முட்டைத் தேவை அதிகரித்துள்ளது.
எனவே, சந்தையில் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளமையும் உற்பத்தி குறைவடைந்துள்ளமையும் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பு செயற்கையானது அல்ல. மாறாக, சந்தையின் கேள்வி மற்றும் வழங்கலுக்கு இடையிலான வேறுபாடு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அநுரசிறி மாரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், முட்டையின் விலை அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.








