சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), 2032 முதல் 2035 வரையிலான காலப்பகுதிக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய அட்டவணையைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து Cricbuzz வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2032ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், இத்தொடரை நடத்தும் நாடு மற்றும் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் தொடர்பில் ஐசிசி இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கிடையில், 2032ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத் தொடரை தென்னாப்பிரிக்கா நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், தென்னாப்பிரிக்கா இதற்கான நடத்தும் நாடாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த எதிர்பார்ப்பு நிறைவேறினால், 2028, 2030 மற்றும் 2032ஆம் ஆண்டுகளில் நடைபெறும் தொடர்ச்சியான மூன்று டி20 உலகக் கிண்ணப் போட்டிகளும் SENA நாடுகளின் கிரிக்கெட் சூழலில் நடைபெறும் வாய்ப்பு உருவாகும்.
SENA நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சு, பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவற்றுக்குச் சாதகமானவை.
இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டி ரசிகர்களுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அவுஸ்திரேலியாவின் பெரிய மைதானங்கள், இங்கிலாந்தின் ஸ்விங் தன்மையுடைய ஆடுகளங்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வேகமான ஆடுகளங்கள் ஆகியவை டி20 போட்டிகளுக்கு வெவ்வேறு சவால்களை வழங்கக்கூடும்.
மேலும், 2032 முதல் 2035 வரையிலான காலப்பகுதிக்கான ஐசிசியின் உத்தேசப் போட்டி அட்டவணையில் ஆறு முக்கிய சர்வதேச தொடர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி,
- 2032: ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணம் – ஒக்டோபர் / நவம்பர்.
- 2033: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – ஜூன்.
- 2033: சாம்பியன்ஸ் கிண்ணம் – ஒக்டோபர்.
- 2034: ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணம் – ஜூலை.
- 2035: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.
- 2035: ஒருநாள் உலகக் கிண்ணம்.
இத்தொடர்களுக்கான நடத்தும் நாடுகள் மற்றும் போட்டி மைதானங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.








