2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக களப்பணி மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை (Field Attendance and Transport Allowance – FAT Allowance) மீள வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் இன்று (13) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நாடளாவிய ரீதியில் மற்றுமொரு வேலைநிறுத்தப் போராட்டத்தையும் பாரிய எதிர்ப்புப் பிரசாரத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் களப்பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் செலவுகளைக் கருத்திற்கொண்டு, FAT கொடுப்பனவை 75,000 ரூபாவாக மீள வழங்க வேண்டும் என அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் இலங்கை பொறியியல் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்தக் கொடுப்பனவு, 2024ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக குறித்த கொடுப்பனவை மீள வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்த போதிலும், அரசாங்கம் தமது கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்துள்ளதாகவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனையடுத்து, சங்கத்தின் நிறைவேற்றுக்குழு தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, அனைத்து கள ஆய்வுகள் மற்றும் வழமையான அலுவலக நேரத்திற்கு அப்பால் முன்னெடுக்கப்படும் பணிகளில் இருந்து விலகுவதற்குப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், மாகாண அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்கள், உத்தியோகபூர்வ திறப்பு விழாக்கள் ஆகியவற்றையும் புறக்கணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏல மதிப்பீட்டுக் குழுக்கள் மற்றும் கொள்வனவுக் குழுக்களின் செயற்பாடுகளில் இருந்தும் விலகிக்கொள்ளவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று நண்பகல் 12 மணிக்கு கொழும்பு 07, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சங்கக் கட்டடத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
75,000 ரூபா கொடுப்பனவை மீள வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உடனடித் தீர்வை முன்வைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் காலவரையறையின்றித் தொடரும் என அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளால் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.








