2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் அரச துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக நிவாரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை வரவு – செலவுத் திட்ட உரையின்போது அறிவித்தார்.
முக்கிய சலுகைகள்:
- மருத்துவர்கள்: DAT கொடுப்பனவு 70,000 ரூபாவிலிருந்து 95,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
- தாதியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள்: விசேட கடமைக்கான கொடுப்பனவு 6,000 ரூபாவிலிருந்து 12,000 ரூபாவாக இரட்டிப்பாக்கப்படவுள்ளது.
- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: மாதாந்த கல்விசார் கொடுப்பனவில் 25,000 ரூபா அதிகரிக்கப்படவுள்ளது.
- பொலிஸ் உத்தியோகத்தர்கள்: உணவு மற்றும் தங்குமிடத்திற்கான மேலதிக மாதாந்தக் கொடுப்பனவாக 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
- சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்: இடர் கொடுப்பனவு 8,000 ரூபாவிலிருந்து 16,000 ரூபாவாக இரட்டிப்பாக்கப்படவுள்ளது.
- கிராம உத்தியோகத்தர்கள்: போக்குவரத்துக் கொடுப்பனவு 1,600 ரூபாவிலிருந்து 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
- நிறைவேற்று அதிகாரிகள்: தகுதியுடையவர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 50,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபாவாக இரட்டிப்பாக்கப்படவுள்ளது.
- முப்படையினர்: நாளாந்த உணவுக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன.
- ஓய்வூதியதாரர்கள்: 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாந்தம் மேலதிக இடைக்காலக் கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்கப்படவுள்ளது.
சம்பள அதிகரிப்புக்கு 110 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கொடுப்பனவு அதிகரிப்புகள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூலை மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளன.
அதேவேளை, சில கொடுப்பனவு அதிகரிப்புகள் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளதுடன், எஞ்சிய தொகை 2028ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ளது.








