அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வளிக்கவோ, பொதுமக்களுக்கு அர்த்தமுள்ள நிவாரணங்களை வழங்கவோ தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக மில்லேனியல் மற்றும் தலைமுறை Z இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
உலகம் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இலங்கை தொடர்ந்து பின்தங்கியுள்ளதாகவும், இளம் தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான போதிய திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2028ஆம் ஆண்டளவில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2028ஆம் ஆண்டளவில் சர்வதேச நிறுவனங்களுக்கு 3.5 பில்லியன் முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான கடன் தவணைகளை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாகவும், இந்தக் கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கையாளும் அணுகுமுறை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான விடயங்களைக் கண்காணிப்பதற்குப் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை, அரசாங்கத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்துப் பேசிய அவர், அரச ஊழியர்களில் பலர் பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், சிலர் தமது சம்பளத்தில் சுமார் 60 சதவீதத்தை கடன் தவணைகளைச் செலுத்துவதற்காகச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டார்.
அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்காகப் பொதுமக்கள் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடகு வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், கடன்களை மீளச் செலுத்த முடியாததால் சிலர் அடகு வைத்த பொருட்களையும் இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து குடும்பங்கள் மீண்டெழுவதற்கு உதவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்திய வஜிர அபேவர்தன, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அக்கொள்கைகள் உதவியதாகக் கூறினார்.
எனினும், அந்தப் பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தெளிவான பொருளாதார நோக்கோ அல்லது மூலோபாயமோ தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.








